
புத்தளம் பிரதேச மாணவர்களின் கல்வியினை முன்னேற்ற வேண்டும் என்ற அயராத முயற்சியின் விளைவே இன்று புத்தளம் கல்வி வலயம் பெற்றுள்ள புலமைப் பரிசில் சாதனையாகும் என வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ. எஹியா தெரிவித்தார்.
இவ்வாண்டு ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மூன்று மாணவிகளுள் ஒருவரான புத்தளம் சென். அன்?ஸ் மகா வித்தியாலய மாணவி மஹேஷா சுபிபியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
புத்தளம் சென். அன்?ஸ் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் எஹியா மேலும், கூறியதாவது;
"கடந்த காலங்களில் புத்தளத்தின் சகல துறை அபிவிருத்திகளும் புறக்கணிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, கல்வி அபிவிருத்தி மிகவும் பின்னடைந்திருந்த வேளையிலேயே எனது மாகாண சபை பிரவேசம் ஆரம்பமானது.
வடமேல் மாகாண முதலமைச்சருடன் நாம் பேசி 2008 ஆம் ஆண்டை புத்தளத்தின் கல்வி அபிவிருத்தி ஆண்டாகப் பிரகடனப்படுத்தினோம். இதன் விளைவாக கல்வியை சீராக தொடர வேண்டுமென்ற ஆர்வம் மாணவர்கள், மற்றும் பெற்றோர்களிடத்தில் ஏற்பட்டிருக்கின்றது.
இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த வேகத்தின் காரணமாக நடைபெறுகின்ற பரீட்சை முடிவுகளில் பாரிய மாற்றத்தினைக் காண்கின்றோம்.
இன்று அகில இலங்கை ரீதியில் எமது மாணவி மஹேஷா 183 புள்ளிகளுடன் சாதனை படைத்துள்ளார். இவ்வாறான சாதனைகள் இன்னும் அதிகரிக்க வேண்டும். இவற்றுடன் பரீட்சைகளில் என்றுமில்லாதவாறு அதிகளவான மாணவர்கள் சித்திபெற்றுள்ளமையும் கல்வி மேம்பாட்டிற்காக நாம் அன்று முதல் எடுத்துவந்த பெரும் முயற்சிகளுக்கு எமக்கு கிடைத்த வெற்றிகளாகும். இவை எமக்கு மிகுந்த உற்சாகத்தையும், தைரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் தேசிய ரீதியில் மேற்கொண்ட கணிப்பீட்டின்படி வடமேல் மாகாணம் கல்வியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலாம் இடத்திற்கு வர வேண்டிய வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்ட கல்வியின் பின்னடைவு காரணமாக இரண்டாம் இடத்தில் உள்ளது.
அடுத்த 2010 ஆம் ஆண்டில் வடமேல் மாகாணம் கல்வியில் தேசிய ரீதியில் முதலிடம் பெறும் என்பதில் பூரண நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்காக எம்முடன் இணைந்து அயராது பாடுபடுகின்ற கல்விப் பணிப்பாளர், அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி சகோதரர் முசப்பிர்
