வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் ஏ. எஹியா மீது கணமூலையில் வைத்து பிரதேச அரசியல் பிரமுகர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியதில் மாகாண சபை உறுப்பினரின் வாகனம் சேதத்துக்குள்ளானதுடன் அவரும் அவரது பிரத்தியேகச் செயலாளரும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 1.45 மணியளவில் இச்சம்பவம் கணமூலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
முந்தல் மதுரங்குளி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பிராந்திய கோப் சிட்டி விற்பனை நிலையம் ஒன்று இன்று கணமூலை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட இருந்தது. இவ்வைபவத்திற்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹியா உட்பட பல பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். குறித்த நேரத்திற்கு அங்கு சென்ற மாகாண சபை உறுப்பினரர் தனது வாகனத்திலிருந்து இறங்கும் போது அங்கு வந்த பிரதேச அரசியல்வாதியும் ஆதரவாளர்களும் அவரை கீழே இறங்கவிடாது உனக்கு இங்கே வேலை இல்லை. இங்கே வரக்கூடாது இது எமது ஊர் என்றெல்லாம் கூறி தாக்கியதாக எஹியா கூறினார். இதன் காரணமாக தனக்கும் தனது பிரத்தியேகச் செயலாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதுடன் தனது வாகனத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தாம் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கலகத்தை அடுத்து திறக்கப்படவிருந்த கோப் சிட்டி விற்பனை நிலையத்தை தாமதித்தே திறக்க வேண்டி ஏற்பட்டதாக சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கணமூலை பிரதேசத்தில் இந்தக் கோப் சிட்டி நிலையத்தினை அமைக்க வேண்டும் என எமக்கு சிபாரிசு செய்தவர் மாகாண சபை உறுப்பினர் எஹியாதான். அவரின் வேண்டுகோளுக்காகவே நாம் இந்நிலையத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தோம். எனினும் அவரை அந்நிகழ்வில் கலந்து கொள்ள விடாது தடுக்கப்பட்டமை கவலையளிக்கிறது என மற்றொரு அதிகாரி கூறினார்.
வடமேல் மாகாண சபையில் ஆளும் தரப்பிலிருந்து அண்மையில் எஹியா எதிர்த்தரப்பிற்கு மாறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
எம். எஸ். முஸப்பிர்

1 comment:
அண்மைக்காலமாக கனமூலையில் இருந்து வரும் செய்திகள் அனைத்தும் ஒழுக்க சிர்கேடானதும், காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தும் வகையிலுமே அமைந்துள்ளது. சிலவேளை இதற்கு சமூகத்தில் முன்மாதிரியாக இருக்கவேண்டிய ஆசிரியர்கள், மௌலவிமார்கள், முந்திய, தற்போதைய பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர்களினதும், உறுப்பினர்களினதும், அரசியலில் ஈடுபடுபவர்களினதும் செயட்படுகளின் வெளிப்பாடே என்றும்கூட கூறமுடியும். எனவே நாம் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களோடு சண்டைபோடுதனாலும், அவர்களின் வாகனத்தை சொத்துக்களை சேதப்படுத்துவதனாலும் எமது அநீதியான போக்கு இல்லை என்றதிவிடாது. அகவே இனிமேலாவது நாம் அநீதியான போக்கை மாற்றிக்கொள்ள முற்பட வேண்டும்.
Post a Comment